தமிழ்நாடு

காணாமல் போன நாட்களில் முகிலன் எங்கிருந்தார்? என்ன செய்தார்? -நீதிமன்றம் கேள்வி

webteam

காணாமல் போன நாட்களில் முகிலன் எங்கிருந்தார்? என்ன செய்தார்? என்பது குறித்து விளக்கமளித்தால் ஜாமீன் வழங்க
பரிசீலிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இயற்கை வள பாதுகாப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல சமூக பிரச்னைகளில் தீவிரமாக செயல்பட்டவர் முகிலன்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சென்னையில் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி பேட்டியளித்த அவர் திடீரென மாயமானார். இவர் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

இதனிடையே பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக முகிலன் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் கைதானார். திருச்சி மத்திய சிறையில் உள்ள முகிலன் தற்போது ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது முகிலன் தரப்பில், தன்னை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக கூறப்பட்டது. அதனை மறுத்த அரசுத்தரப்பு, “பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக முகிலன் தலைமறைவானார். அவருக்கு ஜாமீன் வழங்கினால் மீண்டும் தலைமறைவாக வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து நீதிபதி, முகிலன் காணாமல் போன நாட்களில் அவர் எங்கிருந்தார்? என்ன செய்தார்? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இது தொடர்பாக விளக்கமளித்தால், அவருக்கு ஜாமீன் வழங்க பரிசீலிப்பதாக தெரிவித்தார். மேலும் வழக்கை நவம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.