நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் pt web
தமிழ்நாடு

சுழற்சிமுறையில் மாற்றப்பட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்; அமைச்சர்களின் வழக்குகளை விசாரிக்கப்போவது யார்?

PT WEB

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் விசாரிக்கும் வழக்குகள் இந்த மாதம் முதல் சுழற்சி முறையில் மாற்றப்படுகின்றன. அதனால் அமைச்சர்கள், முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்த எடுத்த வழக்குகளை, அடுத்த 3 மாதங்களுக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிக்க உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நீதிபதிகள் மாற்றப்படுவதுடன், அவர்கள் விசாரித்த வழக்குகளும் மாற்றப்படும்.

அதன்படி, அக்டோபர் முதல் டிசம்பர் வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்குகளை விசாரிக்க உள்ள நீதிபதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பெரியசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு பதில், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் சென்னையில் நியமிக்கப்பட்டிருக்கிறார். அடுத்த மூன்று மாதங்களுக்கு எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளதால் இனி, இந்த வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிக்க உள்ளார்.

அமலாக்கத்துறை வழக்கில் கைதான அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு இரண்டு முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யபட்டுள்ளதால், அவர் தரப்பில் உயர் நீதிமன்றத்தை நாடினால், அந்த ஜாமீன் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்புதான் விசாரணைக்கு வரும்.

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை வாபஸ் பெற்றுவிட்டதால், வழக்கை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தொடர்ந்த வழக்கும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்புதான் விசாரணைக்கு பட்டியலிடப்படும்.