செவிலியர்கள் போராட்டம் நடத்தி வரும் டிஎம்எஸ் வளாகத்திற்கு பிக்பாஸ் ஜூலி நேரில் வந்தார்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்த செவிலியர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒருதரப்பு செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.
ஆனால் மற்றொரு தரப்பு செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணை 191-ஐ வெளியிடும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனக்கூறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய போராட்டம் நடத்திய அவர்கள் இன்று முதல் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். செவிலியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என கிராமப்புற மருத்துவ சேவை இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்தும் செவிலியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வரும் டிஎம்எஸ் வளாகத்திற்கு பிக்பாஸ் ஜூலி நேரில் வந்தார். இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய அவர், " சாதாரணமாக கூலி வேலை செய்பவர்களுக்கு கூட தினமும் 500 ரூபாய் கிடைக்கிறது. ஆனால் ஒப்பந்த அடிப்படையில் இங்கு பணியாற்றுபவர்களுக்கு வெறும் 250 ரூபாய் தான் கிடைக்கிறது. ஒரு சராசரியான மனிதனுக்கு இந்த ஊதியம் மிகவும் குறைவு" என்றார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற ஜூலி அதன் மூலம் ஓரளவு புகழ்பெற்றார். அதனைத்தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பெற்ற அவர், போட்டியில் தோல்வியை தான் தழுவினார். இருப்பினும் சமூக வலைத்தளங்களில் அவர் குறித்த பேச்சு ஓயவில்லை. அந்த அளவிற்கு பிரபலம் கிடைத்தது. இந்நிலையில் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வரும் களத்திற்கு ஜூலி நேரில் வந்தார். அடிப்படையில் ஜூலியும் ஒரு செவிலியர் என்பது குறிப்பிடத்தக்கது.