தமிழ்நாடு

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வீடுதேடிச் சென்று நிதி வழங்கிய நீதிபதி

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வீடுதேடிச் சென்று நிதி வழங்கிய நீதிபதி

kaleelrahman

திண்டுக்கல் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி இறந்தவரின் குடும்பத்துக்கு நீதிபதியே வீடுதேடிச் சென்று இழப்பீட்டுத் தொகையை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் வீரசின்னம்பட்டியைச் சேர்ந்தவர்கள் ராஜு, மாயாவு. இவர்கள் இருவரும் கடந்த 2013ஆம் ஆண்டு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இந்நிலையில் இவர்களது உடல்கள் கடந்த 7 வருடத்திற்கு முன்பு சொந்த ஊரான வீரசின்னம்பட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இவர்களது குடும்பத்தினர் யாரும் இழப்பீட்டுத் தொகை ஏதும் கேட்காத நிலையில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த வக்கீல்கள் பைசல் அட்டிபட்டி மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் தாமாகவே முன்வந்து இழப்பீட்டுத் தொகை கேட்டு வழக்கு தொடுத்தனர். இதையடுத்து 20.07.2021 அன்று நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சாலி ஆகிய இரு அமர்வு நீதிபதிகள் முன்னிலையில் இறந்த இருவரது குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் ரூபாயை கேரளா குடிநீர் வாரியம் வழங்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சென்னை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி இன்று நீதிபதி பாரதிராஜா, ராஜு மற்றும் மாயாவு குடும்பத்தாருக்கு தலா ரூ. 10 லட்சம் வீதம் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வீடுதேடிச் சென்று காசோலையாக வழங்கினார். தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் தங்கமணி, வருவாய் ஆய்வாளர் கவிசித்ரா, வி.ஏ.ஓ, சொர்ணலதா ஆகியோர் உடன் இருந்தனர்.