திருநெல்வேலி மாவட்டம், கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்ற இளைஞர், வழக்கு விசாரணைக்காக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அங்கு 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்த போது, தப்பித்து நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஓடியுள்ளார்.
மாயாண்டியை பின் தொடர்ந்து துரத்தி வந்த அந்த கும்பல் நீதிமன்ற வாயில் அருகே, அவரை சரமாரியாக வெட்டியும், அவரது முகத்தை சிதைத்தும் கொடூரமாக தாக்கியது. இதனால், சம்பவ இடத்திலேயே மாயாண்டி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வு, தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
திருநெல்வேலி கொலைக்குற்றம் சார்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை ஏன் காவல்துறை தடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கொல்லப்பட்டவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், நீதிமன்ற வளாகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒரு குற்றவாளியை சம்பவ இடத்திலேயே கைது செய்ததாகவும் தெரிவித்தார்.
அப்போது, குற்றம் நடப்பதற்கு முன்பாகவே அதனை காவல்துறையினர் தடுக்க வேண்டுமென கூறிய நீதிபதிகள், மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டுமென அறிவுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், மாவட்ட நீதிமன்றங்களில் ஏற்கனவே போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
இதனையடுத்து, திருநெல்வேலி சம்பவம் தொடர்பாகவும், மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பு பணிகள் தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.
இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். "எங்கும் கொலை; எதிலும் கொலை" என்ற இந்த திமுக ஆட்சியின் அவல நிலைக்கு, இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல. திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற வாயிலில் நடந்த இக்கொலையை காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நீதிமன்ற வாயில்களில் அச்சமின்றி குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டதன் அத்தாட்சி!” என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள சட்ட அமைச்சர் ரகுபதி, இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். அவர் தமது பதிவில், “திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தத்தை சேர்ந்த மாயாண்டி என்பவர் கொலை வழக்கு ஒன்றில் ஆஜராகி திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு வரும்வழியில், நீதிமன்றத்திற்கு வெளியே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கொலையாளிகளை விரட்டி சென்று ஒருவரை மடக்கிப்பிடித்துள்ளனர். காரில் தப்பி சென்ற மற்றவர்களையும் கொலை நடந்த இரண்டே மணி நேரத்தில் தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வளவு துரிதமாக செயல்பட்டு கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டதை பொறுக்க முடியாமல், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற புழுத்துப்போன பொய்யை பாடத்தொடங்கியிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர்!” என்று குறிப்பிட்டுள்ளார்.