நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு குடியரசுத் தலைவரிடம் கொல்கத்தா நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இதை அவரது வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா டெல்லியில் தெரிவித்தார்.
நீதிபதி கர்ணனின் மகன் சுகன் மற்றும் தங்கள் தரப்பு வழக்கறிஞர்களுடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று அவரது செயலாளர் அசோக் மேத்தாவிடம் கோரிக்கை கடிதத்தை அளித்ததாக மேத்யூஸ் தெரிவித்துள்ளார். மேலும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நீதிபதி கர்ணன் நேரில் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டால், தனக்குள்ள வாய்ப்புகள் மூலம் அவரால் தீர்வு பெற இயலாத சூழல் ஏற்படும் என்பதால், தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோருவதாகவும் மேத்யூஸ் தெரிவித்தார்.