ops - eps - tharasu shyam pt desk
தமிழ்நாடு

“ஓபிஎஸ்-க்கு பலத்த பின்னடைவுதான்” - நீதிமன்ற தீர்ப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்

ஒரு பக்கம் மாநாடு நடத்தி தனது பலத்தை நிரூபித்திருக்கிறார் இபிஎஸ். இன்னொரு புறம் நீதிமன்றமும் அவருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தற்போது ஓபிஎஸ்-ன் நிலைதான் என்ன? மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் நம்மிடையே கூறிய கருத்தை பார்க்கலாம்.

webteam

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியதற்கு எதிராக தடை விதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது. இதுகுறித்து நம்மிடையே பேசினார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம். அவர் பேசுகையில்,

“நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு பலத்த பின்னடைவுதான். அசல் வழக்கு ஒரு சிவில் வழக்கு. கட்சி உரிமையியல் தொடர்பான வழக்கும் சிவில் வழக்குதான். ஆனால், கட்சியென்று வரும்போது சிவில் வழக்கில் இருக்கும் நடைமுறைகளை அப்படியே அப்ளை பண்ண முடியாது. கட்சியின் நிர்வாகம் முற்றிலும் வேறுபட்டது. இதைத்தான் உச்ச நீதிமன்றமும், தனி நீதிபதியும் எடுத்துக் கூறியுள்ளனர்.

EPS OPS

தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு மட்டுமே ஓபிஎஸ்-க்கு ஆதரவாக வந்தது. அதாவது ஒரு கட்சி செயல்படுவதற்கு நாம் தடை விதிக்க முடியாது. இதுவே, சொத்து வழக்கு சிவில் வழக்கு என்பதால் தடை விதித்து விடலாம்.

கட்சி சிவில் வழக்கு என வரும்போது ‘தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் எனக்கு இழப்பு ஏற்படும். முழு வழக்கும் முடிந்து எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் கூட இந்த இழப்பை என்னால் நிவர்த்தி செய்ய முடியாது’ என்ற வாதத்தை நாம் வைப்போம்.

அதே வாதத்தைதான் ஒபிஎஸ் தரப்பும் வைத்தார்கள். ஆனால், அதை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ள வில்லை. இதற்கு காரணம், இவ்வழக்கு ஜனநாயகம், கட்சி, என்பன போன்ற வேறு மாதிரியான சிக்கல் உள்ள ஒரு வழக்கு. பொதுவாக எந்த கட்சியாக இருந்தாலும் நீதிமன்றங்கள் மூலமாக நிவாரணம் தேட முடியாது.

தராசு ஷ்யாம்

கடந்த 1988 ஆம் ஆண்டு நடந்த ஜெயலலிதா, ஜானகி அம்மையாருக்கு இடையே நடந்த வழக்கைகூட இதற்கு உதாரணமாக சொல்லலாம். ஜெயலலிதா - திருநாவுக்கரசு இடையேயான வழக்கு அனைத்துமே கட்சி உரிமை தொடர்பான வழக்குதான். இது எதுவுமே நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்டதே கிடையாது. மக்கள் மன்றத்தால் மட்டும்தான் தீர்க்க முடியும்” என்றார்.