தமிழ்நாடு

பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் மரணம்: தமிழக அரசு என்ன செய்தது? – ஜெயக்குமார் கேள்வி

webteam

புதிய தலைமுறை உதவி ஆசிரியர் முத்துகிருஷ்ணன் விபத்தில் உயிரிழந்ததில் தமிழக அரசு என்ன விசாரணை செய்தது? அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வழக்கறிஞர்களுடன் சென்று மனு அளித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’வரும் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தியை ஒட்டி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நந்தனம் அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செய்ய இருக்கிறோம். இதற்கான உரிய அனுமதி கேட்டு மனு கொடுத்து இருக்கிறோம்.

அதேபோல் சென்னையில் தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துவதால் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம். வாய்ப்பு இருந்தால் ராமநாதபுரம், இல்லையெனில் சென்னையில் மரியாதை செலுத்துவது அதிமுகவின் வழக்கம்.

கோவை கார் விபத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அது தொடர்பாக இன்றுதான் முதலமைச்சர் ஆலோசனை செய்து இருக்கிறார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை அறிக்கையை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெளிவுப்படுத்தி இருக்கிறார். இன்னும் ஒ.பி.எஸ் மற்றும் சசிகலா தான் பேச வேண்டும்.

அனைத்து சூழலிலும் பணி செய்யும் செய்தியாளராக இருக்கும் நிலையில், பாதுகாப்பு இல்லாததாக மழைநீர் வடிகால் வாய்க்கால் மாறிவிட்டது. அதனால் தான் முத்து கிருஷ்ணன் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக என்ன விசாரணை நடந்திருக்கிறது? யாரை விசாரணைக்கு உட்படுத்தி இருக்கிறது அரசு? நிவாரணம் மட்டும் அறிவித்தால் சரியானதா? உடனடியாக குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

ஆந்திராவில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதை இதுவரை தமிழக அரசு கண்டிக்கவில்லை’’ என்றும் விமர்சனம் செய்தார்.