சென்னை புத்தக கண்காட்சியில் அரங்கம் அமைத்து புத்தகங்கள் விற்பனையில் ஈடுபட்ட பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது கடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த பூந்தமல்லிப் பகுதியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் அன்பழகன், தற்போது நந்தனத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் அரங்கம் அமைத்து புத்தகங்களை விற்பனை செய்து வந்தார். இவரது கடையில் தமிழக அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய புத்தகங்கள் விற்கப்படுவதாகவும், அதனால் அந்த புத்தகங்களை விற்கக்கூடாது எனவும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயலாளர் முருகன் கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், முருகன் சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் பத்திரிகையாளர் அன்பழகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்மீது பிணையில் வெளிவர முடியாத வகையில் வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “சென்னை புத்தக கண்காட்சியில், அதிமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் புத்தகம் இருந்ததால் 'மக்கள் செய்தி மையம்' அரங்கின் அனுமதியை ரத்து செய்து, பத்திரிகையாளர் அன்பழகனையும் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. அன்பழகன் உடனே விடுவிக்கப்பட்டு, உரிம அனுமதியும் திருப்பித் தரப்பட வேண்டும் !” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அன்பழகனின் கடைக்கு தடை விதித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், புத்தகக் காட்சிக்கு அரங்கம் விண்ணப்பிக்கும் போது பபாசியின் விதிகளுக்கு உட்படுவதாக நீங்கள் ஒப்புக்கொண்டு விண்ணப்பித்துள்ளீர்கள். ஆனால் அரசுக்கு எதிராக நீங்கள் உங்கள் கடையில் சர்ச்சைக்குரிய புத்தகத்தை விற்பது விதிமீறல் ஆகும். எனவே நீங்கள் புத்தக காட்சியில் கலந்துகொள்வதை தடை செய்கிறோம். உடனே கடையை அகற்றிக்கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.