தமிழ்நாடு

லண்டனில் பென்னிகுவிக் கல்லறை புனரமைக்கப்படும்: முதல்வருக்கு கடிதம்

லண்டனில் பென்னிகுவிக் கல்லறை புனரமைக்கப்படும்: முதல்வருக்கு கடிதம்

Rasus

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் லண்டனில் உள்ள கல்லறை புனரமைக்கப்படும் என லண்டன் புனித பீட்டர் தேவாலய இயக்குனர் ஸ்டூவர்ட் தாமஸ், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

லண்டனில் தேவாலய சட்டப்படியும், லண்டன் அரசு உத்தரவுப்படியும் 100 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை இடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்தவகையில் 1911ம் ஆண்டு மறைந்த கர்னல் ஜான் பென்னிக்குவிக்கு எழுப்பப்பட்ட கல்லறை 100 ஆண்டுகள் பழமையானதாகியுள்ளது. இதை இடிக்க தடை விதிக்க வேண்டும் என லண்டனில் படிக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்த பீர் ஒலி சந்தானம் மற்றும் பென்னிகுவிக்கின் உறவினர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் லண்டனில் உள்ள பென்னிகுவிக் கல்லறையை இடிக்க இடைக்கால தடை விதித்த லண்டன் நீதிமன்றம், தமிழகத்தில் பென்னிகுவிக் கடவுளாக பூஜிக்கப்படுவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க கேட்டிருந்தது. அதன்படி, ஜான் பென்னிக்குவிக்கின் பிறந்த நாளான கடந்த ஜனவரி 15ம் தேதி, பென்னிகுவிக்கின் சகோதரர் வழி பேத்திகள் டயானா, ஸான் மற்றும் லண்டன் தேவாலய பிரதிநிதிகள் குழுவினர் தமிழகம் வந்தனர்.

அவர்கள் பென்னிகுவிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணை மற்றும் தமிழக அரசு தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் நிறுவியுள்ள பென்னிகுவிக் மண்டபம் ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும் தேனி மாவட்டத்தில் நடந்த பென்னிக்குவிக் பிறந்தநாள் விழா மற்றும் பொங்கல் விழாக்களில் பங்கேற்றனர். இது ஆவணங்களாக லண்டன் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் லண்டனில் உள்ள கல்லறை புனரமைக்கப்படும். தற்போது இருப்பதைவிட இன்னும் சிறப்பாக்க நடவடிக்கை எடுப்பதாக, லண்டன் புனித பீட்டர் தேவாலய இயக்குனர் ஸ்டூவர்ட் தாமஸ் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். தேவாலய குழுவினருக்கு தமிழக மக்கள் வழங்கிய வரவேற்பும் உபசரிப்பும் குழுவினரின் புகைப்பட பதிவுகள் மூலம் கண்டதாகவும், அது தமிழர்களின் கலாச்சாரத்தை பிரபதிபலிப்பதாக இருந்ததாகவும், இதற்காக தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் லண்டன் தேவாலய இயக்குனர் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.