மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் படித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன், அவரது நண்பரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார். முத்து கிருஷ்ணன், தூக்கில் தொங்கியபடி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முத்துகிருஷ்ணன், தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவுதான், தொலைபேசியில் முத்துக்கிருஷ்ணன் பேசியதாகவும் அடுத்த வாரம் ஊருக்கு வரவிருப்பதாகச் சொன்னதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 ஆம் தேதி முத்துக்கிருஷ்ணன் கடைசியாக தனது முகநூலில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், பல்கலைக்கழகத்தில் சமத்துவம் இல்லை என்றும் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் முத்துக்கிருஷ்ணனின் உயிரிழப்புக்கான காரணம் என்னவென்று தெரியவரவில்லை.