குன்றத்தூர் அருகே 16 வயது வடமாநில சிறுமி தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம்! வெளிவந்த உண்மை!
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோமாகோபா(19). இவர் அதே ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்தில் தங்கி கணவன், மனைவி எனக் கூறி வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சோமா கோபா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த அவரது காதலி கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதாகவும் அதில் அவரது காதலி தற்கொலை செய்து கொண்டதாக குன்றத்தூர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் குன்றத்தூர் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து சோமா கோபாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமியின் கழுத்தின் எலும்புகள் உடைக்கப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து குன்றத்தூர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். அதில் சோமா கோபாவின் நண்பரான சுனில் கோப்(19), என்பவரை கைது செய்து விசாரித்தபோதுதான் சிறுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த நண்பர் அளித்த வாக்குமூலத்தில் உண்மைகள் வெளிவந்தன. அந்த வாக்குமூலத்தின்படி, சோமாகோபாவுடன் அந்த வீட்டில் மூன்று பேரும் வசித்து வந்த நிலையில் அதே ஊரில் இருந்து சிறுமியை அழைத்து வந்து வீட்டில் வைத்து குடும்பம் நடத்தி வந்தனர். நாளடைவில் சோமாகோபாவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை அந்த சிறுமி கண்டித்து கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மூன்று பேரும் சேர்ந்து அந்த சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அந்தக் கொலையை மறைப்பதற்காக அவரே தற்கொலை செய்து கொண்டது போல் கழுத்தை புடவையால் இறுக்கி அவரை காப்பாற்ற இறக்கி வைத்தது போல் நாடகமாடியது தெரியவந்தது.
தங்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் வரவில்லை இதையடுத்து சோமாகோபாவை மட்டும் போலீசார் கைது செய்தனர். தன்னை போலீசார் கைது செய்யமாட்டார்கள் என நினைத்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் மாட்டி கொண்டதாகவும் தன்னுடன் இருந்த பச்சா சம்பவம் நடந்த அன்று சொந்த ஊருக்கு தப்பி சென்று விட்டதாகவும் தெரிவித்தார். இதை அடுத்து சுனில் கோப்பை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் தப்பியோட பச்சாவை தேடி தனிப்படை போலீசார் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு விரைந்துள்ளனர். தற்போது கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு ஆதார் கார்ட்டில் மாறுபட்ட வயது வருவதால் சிறுமியின் உண்மையான வயது என்ன என்பது குறித்து கண்டறிய அவரது பெற்றோரை வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.