கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இங்கு பணிபுரிந்த காவலாளி ஓம்பகதூரை கடந்த 24–ம் தேதி மர்ம கும்பல் ஒன்று கொலை செய்தது. மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரை தாக்கிவிட்டு பங்களாவில் கொள்ளையடுத்துச் சென்றது. இதில் நகைகள், பணம் மற்றும் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நீலகிரி எஸ்.பி, முரளிரம்பா தலைமையிலான போலீசார், விசாரித்து குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படை அமைத்தனர். கொடநாடு எஸ்டேட் அருகே உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் கொலையாளிகள் தாங்கள் வந்த காருக்கு பயன்படுத்திய போலி நம்பர் பிளேட், முகமூடி குல்லா, கையுறைகள் சிக்கின. இவை இந்த வழக்கில் முக்கிய தடயங்களாக இருந்தன.
இதற்கிடையே இந்த சம்பவம் நடந்த அன்று சந்தேகத்துக்கிடமாக நின்ற ஒரு காரை, கூடலூர் அருகே போலீசார் சோதனை செய்தனர். அதில் ஆவணங்கள் இல்லாததால் அந்த காரை பறிமுதல் செய்தனர். காரின் உரிமையாளர் கேரளாவில் இருந்து வந்து ஆவணங்களை காட்டிவிட்டு காரை எடுத்து சென்றார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காரும், கூடலூரில் பிடிபட்ட காரும் ஒரே மாதிரியாக இருந்ததால் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்த கேரளா சென்று அந்த காரை பிடித்தனர்.
காரில் வந்த பாலக்காடு மாவட்டம் சதீஷன், ஷிபு, சந்தோஷ், சைனன் மற்றும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் பிடிபட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஓம்பகதூர் கொலையில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. மலப்புரம் போலீஸ் நிலையத்தில் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், ஆத்தூரில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.