தமிழ்நாடு

குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை - அமைச்சர் ஜெயக்குமார் பாய்ச்சல்

webteam

துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

திருச்சியில் துக்ளக் பத்திரிகையின் பொன்விழா சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அந்த பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி, இரண்டாக பிரிந்த அதிமுகவை இணைத்ததில் தனக்கு பங்கு உள்ளதாக கூறினார். மேலும், தனது அறிவுறுத்தலின் படியே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தியானத்தில் அமர்ந்ததாகவும், அதன்பின்னரே கட்சியில் இணைப்பு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

ஓ.பன்னீர்செல்வம் குறித்து குருமூர்த்தி பேசியது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், குருமூர்த்தி நாவடக்கத்துடன் பேச வேண்டும் எனத் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது அமைச்சர் ஜெயகுமார் இதனை தெரிவித்தார்.

அத்துடன், ஆடிட்டர் குருமூர்த்தி நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியல் மாற்று என கூறியிருப்பது குறித்து பேசும் போது, “கடந்த 15 நாட்களாக  முதலமைச்சரும், நாங்களும் இதற்கான விளக்கத்தை தெரிவித்துள்ளோம். புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சி தலைவி ஜெயலலிதா சினிமா துறையில் பெரிய நட்சத்திரங்களாக ஜொலித்தார்கள். அரசியலில் பெரிய நட்சத்திரங்களாக ஜொலித்தார்கள்.  இவர்கள் எல்லாம் திரைப்பட துறையில் நட்சத்திரங்களாக இருக்கலாம். அரசியலில் பொருத்தவரை ஜொலிக்காத  நட்சத்திரங்கள் தான். கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து அவர் வாக்கு வங்கி என்னவென்று தெரிந்துவிட்டது. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கும் போது  அதே நிலைமைதான் வருங்காலத்தில் அவருக்கும் ஏற்படும்” என்றார் ஜெயக்குமார்.