தமிழ்நாடு

மூதாட்டியிடம் நூதன நகைத் திருட்டு

மூதாட்டியிடம் நூதன நகைத் திருட்டு

webteam

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மூதாட்டியிடம் நகையை பறித்துச்சென்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

ஓசூர்  ஏரிதெருவைச் சேர்ந்த மூதாட்டி சரஸ்வதி என்பவர் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தனது வீட்டிற்கு திரும்பும் போது சாலையில்  நகை வெளியே தெரியும்படி பர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. அதை அந்த மூதாட்டி எடுத்த போது அங்கு வந்த பெண் அந்த பர்ஸ் தன்னுடையது என்று கூறியுள்ளார். பின்னர் அந்த மூதாட்டியை ஆள் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதற்குள் அந்தப் பகுதிக்கு இரண்டாவதாக ஒரு பெண்மணி வந்துள்ளார் இவர்கள் மூவரும் அங்கிருக்கும் போது அங்கு வந்த ஆண் ஒருவர், இரண்டு பெண்கள் உள்பட 3 பேரையும் தனியாக அழைத்துச்சென்று, அறிவுரை கூறுவது போல் மூவரிடமும் இங்கு திருடர்கள் அதிகம் உங்கள் நகைகளை பத்திரமாக பையிக்குள் வைத்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து இரு பெண்களும் பயந்தது போல் தங்களுடைய நகைகளை கழற்றி பையிக்குள் வைப்பது போல் வைத்துள்ளனர். மூதாட்டியின் சுமார் 50 கிராம் தங்க நகைகளை கழற்றி ஒரு காகிதத்திற்குள் சுற்றி பையிக்குள் வைப்பது போல் பாவனை செய்து கொண்டே தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகையை மாற்றி வைத்துவிட்டு அக்கும்பல் தப்பியோடியது. தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து அதிர்ச்சியடைந்த  மூதாட்டி சரஸ்வதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.