உதயநிதி - விஜய் - இபிஎஸ் Pt web
தமிழ்நாடு

சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் தேர்வு.. விஜய், உதயநிதி, இபிஎஸ் உரை.. பேசியது என்ன?

சட்டப்பேரவை சபாநாயகராக தவெக எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரை வாழ்த்தி முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி பேசியது குறித்துப் பார்க்கலாம்.

Premkumar S

தமிழ்நாடு 17-வது சட்டப்பேரவையின் முதல்வராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், சட்டசபை முதல் கூட்டத்தொடரின் 2-வது நாள் அமர்வான இன்று, தவெக சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி பிரபாகர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டசபை துணை சபாநாயகராக தவெக எம்.எல்.ஏ. ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தசூழலில், அவை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இணைந்து பேரவை தலைவரை இருக்கையில் அமர வைத்தனர்.

சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

இதையடுத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், சபாநாயகருக்கு ஒவ்வொரு கட்சிகளின் பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்து சட்டமன்றத்தில் உரையாற்றினர்.

அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி பேசுகையில், ”எந்த அளவுக்கு எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு அளிக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் ஆட்சி சிறப்பாக செயல்படும். எம்.ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் சட்டமன்றத்தில் இருந்து உள்ளீர்கள். இப்படி ஒரு நல்ல வாய்ப்பை பெற்று உள்ளீர்கள். முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்களுக்கு எனது இதய பூர்வமான நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசுகையில், தமிழ்நாட்டின் நலன் தான் மிகமிக முக்கியம். பேரவை தலைவர் போட்டியின்றி தேர்வாகி இருக்கிறீர்கள். முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரான நானும், அவை முன்னவரும் உங்களை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்துள்ளோம். இரு தரப்பையும் நீங்கள் அரவணைத்து செல்ல வேண்டும். சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி காதுகளாகவும், எதிர்க்கட்சி குரலாகவும் இருக்க வேண்டும் அதில் தான் அவையின் பெருமை அடைந்துள்ளது.

சட்டப்பேரவையில் விஜய்

சட்டப்பேரவையில் முதல்வர் விஜயின் முதல் உரை!

சட்டப்பேரவையில் முதன்முறையாக உரையாற்றியுள்ள முதல்வர் விஜய், ”ஜனநாயகத்தின் இதயமாக இந்த பேரவை செயல்பட வேண்டும்; மக்களே மக்களுக்காக நடத்தும் ஆட்சி மக்களாட்சி என ஆபிரகாம் லிங்கன் கூறியுள்ளார். ஒரு உறுப்பினர் உள்ள கட்சிக்கும் இந்த அவையில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகருக்கு உதவியாக செயல்படுவார்கள். அதிகமான மக்கள் இந்த ஆட்சியில் நன்மை பெற்றுள்ளார்கள் என சொல்லும் வகையில் செயல்பாடு இருக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளை செயல்படுத்தும் திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு பேரவைக்கு உள்ளது” எனத் தெரிவித்திருக்கிறார்.