தமிழ்நாடு

ஜெயராஜ், பென்னிக்ஸ் முதலாமாண்டு நினைவு தினம்: கனிமொழி எம்.பி நேரில் ஆறுதல்

sharpana

காவலர்கள் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படும் சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கனிமொழி எம்.பி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நிறவெறி கொண்ட காவலர் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டை கொன்ற சம்பவம் உலகையே வெகுண்டெழ வைத்தது. இச்சம்பவம் நடந்த இரண்டு மாதத்திலேயே, அதேபோன்ற  ஒரு கொடூரம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்று இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்தது. தந்தை, மகனை விராசணைக்கு அழைத்துச் சென்ற சாத்தான் குளம் காவலர்கள் இருவரையும் உயிரிழக்கும் அளவுக்கு சித்ரவதை செய்து அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. அந்தத் தாக்குதலில், தந்தை, மகன் இருவருமே சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் கடும் கண்டனங்களைக் குவித்தது.

இந்நிலையில், இன்று உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி கனிமொழி எம்.பி அவர்களது கடைக்கும் வீட்டிற்கும் சென்று அஞ்சலி செலுத்தி ஜெயராஜின் மனைவிக்கும் மகள்களுக்கும் ஆறுதல் கூறியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் ”இன்று, சாத்தான்குளத்தில் சென்ற ஆண்டு காவல்துறையால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு மரணமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அவர்களின் கடையில் இருவரது உருவப்படங்களுக்கும் அஞ்சலி செலுத்தியபோது, மீளாத்துயரில் வற்றாத கண்ணீரில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளையும் வைராகியத்தோடு எதிர்கொள்ளும் தாய்களை சந்தித்து ஆறுதலும் உறுதியும் சொன்னேன்” என்று தெரிவித்திருக்கிறார்.