ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த குழுவிலிருந்த செவிலியர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் பரவிய நிலையில், அவர் அந்தக் குழுவில் இடம் பெறவில்லை எனறு அப்போலோ மருத்துவக்குழு விளக்கமளித்துள்ளது.
அப்போலோ மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றியவர் குளோரியா. இவரது கணவர் சில மாதங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் குளோரியா விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை குளோரியாவின் 2 பிள்ளைகளுக்கும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதனால், மேலும் மன உளைச்சலுக்கு ஆளான குளோரியா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, அப்போலோ மருத்துவனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் குழுவில் செவிலியர் குளோரியாவும் இருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த குழுவில் குளோரியா இடம்பெறவில்லை என்றும் தனிப்பட்ட காரணத்தால் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் அப்போலோ மருத்துவக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குளோரியா தனது கணவர் உயிரிழந்ததிலிருந்தே மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.