தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிட வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

ஜெயலலிதா நினைவிட வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Rasus

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, அரசு பணத்தில் நினைவிடம் அமைக்க கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மக்களின் வரிப் பணத்தை, பள்ளிகள், சுகாதார வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட முதன்மையான பணிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டுமே தவிர ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு நினைவிடம் அமைக்க கூடாது எனவும், அப்படி நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டதால் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக மனுவில் கூறியுள்ள ரவி, இனிமேல் மெரினாவில் நினைவிடங்கள் கட்ட அனுமதிக்க கூடாது என உத்தரவிடவும் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் குலுவாடி ஜி ரமேஷ், கே.கல்யாணசுந்தரம் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு குறித்து செப்டம்பர் 18-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.