OPS
OPS pt desk
தமிழ்நாடு

ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச் செயலாளர்... தர்ம யுத்தம் ஓயாது..! - ஓ.பன்னீர் செல்வம்

webteam

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

jayalalitha

இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஓபிஎஸ் பேசுகையில்,.. " கழகத்தின் தலைமை பொறுப்பிற்கு வருபவர்கள் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டு இருந்தது. ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச் செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதை மாற்றிவிட்டு தனக்குத் தானே பொதுச் செயலாளர் பட்டத்தை எடப்பாடி பழனிசாமி சூட்டிக் கொண்டார்.

எந்த தியாகமும் செய்யாமல் எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வந்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை தூக்கி எறிந்துவிட்டு ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச் செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றும் வரை தர்ம யுத்தம் ஓயாது. கட்சி விவகாரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரவுள்ளது. தேர்தல் கூட்டணிக்காக உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் தொடர்ந்து கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கபட்டு வரப்படுகிறது. அனைத்து பூத்களிலும் ஏஜென்டுகள் நியமிப்பது தற்போது நமக்கு தலையாய கடமை. தேர்தலில் வெற்றி கூட்டணி அமைய உள்ளது.

EPS

கொங்கு மண்டலம் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. பொதுச் செயலாளர் பதவிக்கு தொண்டர்கள், கட்சி உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என மாற்றியுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என எம்ஜிஆர் சட்டத்தை உருவாக்கினார். எடப்பாடி பழனிசாமியால் தற்போது இந்த உரிமை பறிபோயுள்ளது." என பேசினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், பறிக்கப்பட்ட உரிமைகளை தொண்டர்களுக்கு வாங்கிக் கொடுப்பதே தற்போது எங்களுடைய முழு நோக்கமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை சந்திக்க வாய்ப்புள்ளதாக பரவும் தகவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சந்தித்த பிறகு பதில் தருகிறேன் என்றார். கூட்டணி தொடர்பான கேள்விக்கு, எங்களுடன் இணைந்து செயல்பட வந்தால் அந்த கட்சிகளுக்கு ஆதரவு தந்து இணைந்து செயல்படுவோம் என தெரிவித்தார்.

எழில் கிருஷ்ணா