தமிழ்நாடு

‘கஜா‘ புயலைபோல ‘நிவர்‘ பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது: ஜெயக்குமார்

webteam

கஜா புயலைபோல நிவர் புயல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக்நகரில் கவிஞர் சுரதா சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புயலுக்கு யாரும் அச்சப்படத் தேவையில்லை. எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கஜா புயலைபோல நிவர் புயல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என சொல்லப்பட்டுள்ளது.

மீனவர்கள் தாழ்வான பகுதியில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும் எனவும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடலில் இருப்பவர்கள் எல்லாரும் புயலுக்கு முன் திரும்பி வந்துவிடுவார்கள்.” எனத் தெரிவித்தார்.

மேலும், “ அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது தவறில்லை. என் மகனை நான் அரசியலுக்கு கொண்டு வரவில்லை; ஜெயலலிதாதான் கொண்டு வந்தார். திமுகவில் வழிவழியாக வாரிசு அரசியல் செய்து வருகின்றனர்; அதிமுகவில் அதுபோன்று இல்லை.

அதிமுகவில் கொடிப்பிடித்தவர்கள் கூட முதல்வராக முடியும்; திமுகவில் முடியுமா? துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க மு.க.ஸ்டாலின் தயாரா? உதயநிதியை அறிவிப்பாரே தவிர துரைமுருகனை அறிவிக்கமாட்டார்” என்றார்.