தமிழுக்கு திமுக என்ன செய்தது என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை என்றும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும் என ரயில்வே வாரியம் அறிவித்திருந்தது.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் “தபால் துறையின் தேர்வுகளை தமிழில் நடத்த முடியும் என்கிற போது, ரயில்வே துறையில் உள்ள தேர்வுகளை ஏன் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த முடியாது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. தமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் தொடர்ந்து வேண்டுமென்றே ஈடுபட்டு, தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களம் ஒன்றை மீண்டும் அமைத்திட வேண்டாம் என்று கடுமையாக எச்சரிக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
மேலும் ரயில்வே தேர்வுகளில் தமிழ்மொழியை புறக்கணிக்கணிப்பதாக கூறி எம்பி கனிமொழி தலைமையில் ஏராளமான திமுகவினர், சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “தமிழை வைத்து திமுக வியாபாரம் செய்கிறது. தமிழுக்கு திமுக என்ன செய்தது? தமிழால், தமிழை வைத்து வியாபாரம் செய்யும் குடும்பம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது ரயில்வே தேர்வுகளை தமிழில் நடத்த திமுக என்ன நடவடிக்கை எடுத்தது?” என கேள்விகளை எழுப்பினார்.