தமிழ்நாடு

ஹாசினி வழக்கில் குற்றவாளியின் தண்டனை பிறருக்கு பாடமாகும்: அமைச்சர் ஜெயக்குமார்

ஹாசினி வழக்கில் குற்றவாளியின் தண்டனை பிறருக்கு பாடமாகும்: அமைச்சர் ஜெயக்குமார்

webteam

சிறுமி ஹாசினியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி மீது எடுக்கப்படும் நடவடிக்கை, மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை போரூர் அருகே உள்ள மதனந்தபுரம் மாதா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பாபு, ஸ்ரீதேவி தம்பதியின் 7வயது மகள் ஹாசினி கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி காணாமல் போனார். புகாரின் பேரில் தேடி வந்த காவல்துறையினர் மதுரவாயல் தேசிய நெடுஞ்சாலையில் எரிந்த நிலையிலிருந்து சிறுமியின் உடலை மீட்டனர். சந்தேகத்தின் அடிப்படையில், பொறியியல் பட்டதாரி தஷ்வந்திடம் நடைபெற்ற விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். தஷ்வந்த் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் கடந்த 6 மாதங்களாக அவர் சிறையிலடைக்கப்பட்டார். இந்நிலையில் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து அவரை, மகளிர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. தங்கள் மகளை கொடூரமாக கொன்ற தஷ்வந்திற்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த ஹாசினியின் பெற்றோருக்கு தஷ்யந்த் ஜாமீனில் வெளிவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சிறுமியின் தந்தை பாபு, குற்றவாளியின் மீதான குண்டர் சட்டம் ரத்து என்பது, எந்த குற்றம் வேண்டுமென்றாலும் செய்யலாம் என மக்களுக்கு சொல்வது போல் உள்ளது என்றார். கொல்லலாம், பாலியல் வன்கொடுமை செய்யலாம், பலரை கொன்றாலும் வெளியில் வந்துவிடலாம் என்பது தான் தஷ்வந்த் விவகாரத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்றும் வருத்தம் தெரிவித்தார். குற்றவாளியின் தந்தை சாவல் விட்டதை போல், தன் மகனை வெளியே கொண்டு வந்து விட்டார் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஹாசினி விவகாரத்தில் சட்ட அமைச்சரிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அத்துடன் சிறுமி ஹாசினியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி மீது எடுக்கப்படும் நடவடிக்கை, மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் தஷ்வந்த் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதன் உத்தரவு நகலை ஆய்வுசெய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.