தமிழ்நாடு

 “மண்டபத்திற்கு சீல் வைத்தது ஜனநாயக விரோத நடவடிக்கை” - ஜவாஹிருல்லா

webteam

ஆம்பூர் தனியார் மண்டபத்தில் தேர்தல் பற்றி ஆலோசிக்கவில்லை என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இஸ்லாமிய அமைப்பினருடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் நடந்து முடிந்த பின்னர் தேர்தல் படையினர் அங்கு வந்தனர். அத்துடன் தேர்தல் நடக்கும் தொகுதியில் அனுமதியின்றி அரசியல் கூட்டம் நடத்தியதாக தனியார் மண்டபத்திற்கு வட்டாட்சியர் சுஜா சீல் வைத்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, “ஆலோசனைக்கூட்டம் நடத்திய மண்டபத்திற்கு சீல் வைத்தது ஜனநாயக விரோத நடவடிக்கை. நாட்டில் நிலவும் அரசியல் சூழல் பற்றியே கூட்டத்தில் ஆலோசனை நடத்தினோம். தேர்தல் பற்றி ஆலோசிக்கவில்லை” என தெரிவித்தார்.  

இதுகுறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைசெல்வனை தொடர்பு கொண்டு கேட்டபோது, “ஜவஹீருல்லா கூறிய கருத்து தவறு. ஆலோசனை கூட்டம் நடத்தினால் 48 மணி நேரத்திற்கு முன் கூட்டியே ஆன்லைன் மூலம் அனுமதி பெற வேண்டும். அதுதான் தேர்தல் ஆணையத்தின் விதி. வாக்கு சேகரிக்கும் நிகழ்வை ஸ்டாலின் நடத்தியுள்ளார். தேர்தல் ஆணையம் சுயேட்சையாக செயல்பட்டு சீல் வைத்துள்ளது. இதில் அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியும் தலையிட முடியாது. இதில் வேறு எந்த அரசியலும் இல்லை” எனத் தெரிவித்தார்.