jason sanjay pt
தமிழ்நாடு

"அப்பா அதற்காக காத்திருக்கிறார்.." விஜய் குறித்து மகன் ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி!

தனது அப்பா விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் பேசியுள்ள வார்த்தைகள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றன.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது திரைத்துறையில் இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். டோலிவுட் நடிகர் சந்தீப் கிஷனை வைத்து ‘சிக்மா’ படத்தை இயக்கியுள்ள அவர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘சிக்மா’ திரைப்படம் கடந்த ஜூன் மாதமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போனது. இந்நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ‘சிக்மா’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘சிக்மா’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டார்.

vijay

நிகழ்ச்சியில் ஜேசன் சஞ்சயிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், “திரைத்துறையில் பிரபலமாக இருப்பவர்கள், தங்களது பிள்ளைகளும் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விஷயங்களைச் செய்வார்கள். அவர்களுக்கு பண உதவி செய்வது, முன்னணி இயக்குநர்களிடம் சிபாரிசு செய்வது என பல வழிகளில் ஆதரவாக இருப்பார்கள். அந்த வகையில், உங்கள் தந்தை விஜய், உங்கள் முதல் படத்திற்காகவும், படத்தின் புரமோஷனுக்காகவும் ஏதாவது செய்தாரா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், “அப்பா எனக்காக நிறைய செய்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, உங்களை எனக்குத் தந்திருக்கிறார். ஆனால், பட புரமோஷன் சார்ந்த விஷயங்களில் அவர் தலையிடுவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல், அவர் தற்போது முதல்வராகப் பதவி வகிக்கிறார். அவருக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. அவரும் ‘சிக்மா’ படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்” என்று கூறினார்.

தொடர்ந்து, “உங்கள் தந்தை முதல்வரானபோது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு சஞ்சய், “உங்களைப் போலவேதான். அப்பா முதல்வரானதில் எனக்கும், அவரைச் சுற்றியிருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது” எனத் தெரிவித்தார். அப்பா குறித்து ஜேசன் சஞ்சய் பேசிய இந்தப் பதில்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, “எல்லாவற்றுக்கும் மேலாக, உங்களை எனக்குத் தந்திருக்கிறார்” என்ற அவரது வார்த்தைகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.