தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, முல்லைப் பூ, கனகாம்பரம், மரிக்கொழுந்து போன்ற மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அங்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மல்லிகை பூவின் விலை கிலோ ஒன்று 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று காலை மலர் சந்தையில் மல்லிகைப் பூவின் விலை கடும் உயர்வு காணப்பட்டு ஒரு கிலோ 4500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது நாள் ஒன்றுக்கு சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு 30 கிலோவுக்கும் மேல் மல்லிகை பூ விற்பனைக்கு கொண்டு வரப்படும். தற்போது 10 கிலோ அல்லது 15 கிலோ மட்டுமே மல்லிகைப் பூ வருகிறது. மழையின் காரணமாக மல்லிகைப் பூவின் வரத்து குறைந்திருக்கும் நிலையில் பூவின் விலை அதிகரித்துள்ளது என மார்க்கெட் சந்தையில் வியாபாரிகள் கூறியுள்ளனர்.