தமிழ்நாடு

தமிழ் முறைப்படி திருமணம் செய்த ஜப்பான் தம்பதி

rajakannan

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தம்பதி தமிழ் கலாச்சாரத்தின் மீதுள்ள விருப்பத்தால், மதுரையில் தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

யுடோ நினகா (31) மற்றும் சிகரு ஓபாடா (27) தம்பதிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி ஜப்பானில் சிறிய அளவில் திருமணம் நடைபெற்றது. இருப்பினும் மற்றொரு நாட்டின் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவர்களது விருப்பமாக இருந்தது. அவர்களுக்கு தமிழ்நாடும், தமிழ் கலாச்சாரமும் பிடித்திருந்தது. அதனால் மதுரைக்கு சென்று திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தார். தமிழகத்தை தவிர மாற்றும் இடம் அவர்களுக்கு தோன்றவில்லை.

சிகரு ஒபாடாவின் தோழி வினோதினி மற்றும் அவரது கணவர் வெங்கடேஷ். இவர்கள் மதுரையைச் சேர்ந்த இந்த தம்பதி ஜப்பானில் வசித்து வருகின்றனர். வினோதினி - வெங்கடேஷ் தம்பதி யுடோ - சிகரு தம்பதியின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை மதுரையில் மேற்கொண்டனர். டிசம்பர் 31-ம் தேதி ஜப்பான் தம்பதியின் இரண்டாவது திருமண நிகழ்ச்சி மதுரையில் ஆடம்பரமாக நடைபெற்றது. தமிழிலேயே இவர்கள் திருமண நிகழ்ச்சிக்கு பத்திரிக்கை அடிக்கப்பட்டது.

ஜப்பான் தம்பதி யுடோ - சிகரு தமிழ் முறைப்படி பட்டு வேஷ்டி, பட்டு சேலை அணிந்து மண மேடைக்கு வந்தனர். திருமண நிகழ்ச்சியில் சிகாருவின் பெற்றோர்கள் மற்றும் யுடோவின் சகோதரர்கள் கலந்து கொண்டனர். ஐயர் வேதம் ஓத தாலி கட்டி இந்த திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சி முடிந்த உடன் பத்திரிக்கையாளர்களிடம் மணப்பெண் சிகாரு சுத்தமான தமிழில் பேசினார். அப்போது, “ஜப்பானில் இருந்து கல்லூரி படித்துக் கொண்டிருந்த போது, தமிழை மாற்று மொழியாக எடுத்து படிக்க தேர்வு செய்தேன். என்னுடைய் ஆய்வுக்காக தமிழகம் வந்தேன். இந்த நாட்டையும் கலாச்சாரத்தையும் மிகவும் விரும்புகிறேன். இந்திய முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று விருப்பம் எப்பொழுதும் இருந்தது” என்றார்.

ஏன் மதுரையை தேர்வு செய்தீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “மதுரை என்பது ஒட்டுமொத்த தமிழ் கலாச்சாரத்தின் மையம். அதனால்தான் மதுரையில் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்” என்றார். மணமகன் யுடோ பேசுகையில், “இது எனக்கு மிகவும் முக்கியமான அனுபவம். இங்கு திருமணம் செய்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார். திருமண நிகழ்ச்சி முடிந்த உடன் தம்பதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.