தமிழ்நாடு

நாளை சுய ஊரடங்கு - தமிழகத்தில் எவை இயங்கும்? எவை இயங்காது?: முழு விவரம்!!

webteam

கொரோனா தடுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக நாளை சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை அடுத்து, தமிழகத்தில் பல சேவைகள் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு தீவிர நடவடிக்கைகளின் ஒரு முன்னோட்டமாக நாளை சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் வைத்துள்ளார். தமிழகத்தில் ஒரு சில சேவைகளைத் தவிர மற்ற அனைத்தும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு, தனியார் பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள், பயணிகள் ரயில்கள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில உள்ளூர் விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கால் டேக்ஸி, ஆட்டோக்கள்,‌ லாரிகள் இயங்காது என அந்தந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன. மளிகை கடைகள், காய்கறி கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள உணவகங்கள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே அறிவித்ததுபோல வாரச்சந்தைகள் மூடப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்படும்.

சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும், அத்யாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுய ஊரடங்கின்போது மருத்துவமனைகள், மருந்தகங்கள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பால் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் பால் விநியோகம் நிறுத்துவதாக அறிவித்துள்ள நிலையில், பால் விநியோகம் வழக்கம்போல் நடைபெறும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும். குறைந்த ஊழியர்களுடன் அனைத்து பெட்ரோல் பங்குகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் மின்சார ரயில்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும்.