மதுரையில், கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நிச்சயம் நடைபெறும் என பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி உறுதியளித்துள்ளார்.
இன்று மதுரை மாவட்டத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்த பின்னர் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், “கொரோனோ 3-ஆம் அலையில் இருந்து மக்களை காக்க தமிழகத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களை கொரோனாவிலிருந்து காப்பாற்ற, நம் முதல்வர் ஒய்வில்லாமல் உழைத்து வருகிறார்.
இந்தியாவில் உள்ள பிற மாநில முதல்வர்களுக்கு முன்னோடி முதல்வராக தமிழக முதல்வர் செயலாற்றி வருகிறார். 3ம் அலை காரணமாக மதுரை மாவட்டத்தில் மருத்துவக்குழு வீடு, வீடாக கொரோனோ பரிசோதனைகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கொரோனா மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளது. மதுரை மாவட்டத்தில் முதல்வரின் வழிகாட்டுதல் மற்றும் சில கட்டுபாடுளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. பொங்கல் நேரத்தில், அப்போதைய சூழலுக்கு ஏற்ப ஜல்லிகட்டுக்கு போட்டிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” என்றார்.