தமிழ்நாடு

தருமபுரி: 24 காளைகளை அடக்கி பைக்கை தட்டித் தூக்கிய மணப்பாறை மாடுபிடி வீரர்

kaleelrahman

தருமபுரியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 24 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு ஜல்லிகட்டு இளைஞர் பேரவை சார்பில் தருமபுரி அடுத்த டிஎன்சி மைதானத்தில் 2-ம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு வெகு விமர்சியாக துவங்கியது. இந்த போட்டியில் 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், 8 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த கில்பர்ட் ஜான் என்ற மாடுபிடி வீரர் 24 காளைகளை அடக்கி முதல் பரிசான இருசக்கர வாகனத்தை தட்டிச் சென்றார். மேலும் 17 காளைகளை அடக்கிய பழனியைச் சேர்ந்த இரேந்திரனுக்கு குளிர்சாதன பெட்டியும், 11 காளைகளை அடக்கிய நாமக்கலைச் சேர்ந்த ஜெயக்குமாருக்கு வாஷிங்மிசின் வழங்கப்பட்டது.

அதே போல் களத்தில் வெகுநேரம் மாடுபிடி வீரர்களுக்கு பிடிக்கொடுக்காமல் போக்கு காட்டி சிறப்பாக விளையாடிய தருமபுரி அஸ்தகிரியூர் அண்ணாத்த காளை சிறந்த காளைக்கு முதல் பரிசாக 2 கிராம் தங்கம், இரண்டாவதாக வந்த தருமபுரி அப்துல்லா என்பவரது காளைக்கு எல்இடி டிவியும், மூன்றாவதாக வந்த வெள்ளையன் என்பவரது காளைக்கு பீரோவும் பரிசாக வழங்கப்பட்டது.