தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்க தொடங்கியது. தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரத்தைகாக்க சமூக வலைதளங்கள் மூலம் இணைந்த இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், அலங்காநல்லூரில் குவியத் தொடங்கிய இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்தது. மறியல் செய்தும், இடத்தை விட்டு கலைய மறுத்தும் போராட்டக்காரர்கள் அதே இடத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பெண்கள், முதியவர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும், ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்க வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த அவசரச்சட்டம் கொண்டுவரவேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் அலங்காநல்லூரில் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து கைதானவர்களில் 86 பேர் மட்டும் விடுவிக்கப்பட்டனர். மேலும் 176 பேர் விடுவிக்கப்படவில்லை.
தொடர் அழுத்தம் காரணமாக கைது செய்யப்பட்டவர்களில் இளைஞர்கள் எழுச்சியுடன் முழக்கங்களை எழுப்பியபடி தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போரட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மெரினாவில் போராட்டம்
பரபரப்பாக காணப்படும் தலைநகர் சென்னை மெரினா கடற்கரை ஜல்லிக்கட்டு போராட்டத்தால் விறுவிறுப்படைந்துள்ளது. காவலர்கள் எச்சரித்த கெடுவையும் மீறி ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தும்வரை போரட்டம் தொடரும் என்று போரட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
முதலமைச்சர் வரும் வரை போராட்டம் தொடரும்..
இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவிக்க வந்தபோது அவர்கள் ஏற்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கட்சியினர் திரும்பிச்சென்றனர், நேரம் ஆக ஆக இந்தப்போராட்டத்தில் ஏராளமானோர் இணைந்துள்ளனர். போராட்டக்காரர்களுடன் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் அரசு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் திரண்ட மாணவர்கள்
கோவை வ.உ.சி மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாத ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தர வலியுறுத்தி, அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் நடைபெற்றது.
தஞ்சை - அரியலூர் சாலையில் மறியல்
கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தஞ்சை - அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அலங்காநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட காளைகளை விடுவிக்கவும் வேண்டுமெனவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி இந்த மறியல் நடைபெற்றது. இதனால், தஞ்சாவூர் அரியலூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தடையை மீறி ஜல்லிக்கட்டு
மணப்பாறை அருகேயுள்ள பொத்தமேட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. தகவலறிந்து காவல்துறையினர் வருவதற்குள் தற்காலிக வாடிவாசல் அகற்றப்பட்டது. ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தடையை மீறி காளைகளை அவிழ்த்துவிட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதிகோரி அலங்காநல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நெல்லை அடுத்த பாளையங்கோட்டையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில், இணையதளங்கள் மூலம் கூடிய இளைஞர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் சென்னையை அடுத்த திருவான்மியூரில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பதாகைகளை ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகையில் ஈடுபட்ட மாணவர்கள் கைது
ஜல்லிகட்டு தடையை நீக்க கோரியும், மாணவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்தும், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். தபால் நிலையத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், பீட்டா அமைப்பைத் தடை செய்யக்கோரி முழக்கமிட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸார், மாணவர்கள் கலைந்து போகச் சொன்னதால், வாக்குவாதம் ஏற்பட்டது. கலைந்துபோக மறுத்ததையொட்டி, சுமார் 150 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.
போராட்டக்களத்தில் திரைப்பிரபலங்கள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் இளைஞர்கள் மாபெரும் அளவில் போராட்டம் நடத்தி வரும் சூழலில், திரைத்துறை பிரபலங்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
தமிழன் என்ற உணர்வுடன் போராட்டும் இளைஞர்கள் உணர்வுக்கு தலைவணங்குகிறேன் - விஜய்
“அரசியல்வாதிகள் களமிறங்காததால் மக்கள் போராட்டம்” - சீமான்
“மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்” - அமீர்
“ஜல்லிக்கட்டில் காளைகள் வதைபடுவதில்லை” - விவேக்
“ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும்” - கார்த்திக் சுப்புராஜ்
“தமிழர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது” - ஜி.வி.பிரகாஷ்