தமிழ்நாடு

 “தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்

webteam

காவேரி நதி மீட்டெடுப்பதன் மூலம், கர்நாடகாவும் தமிழ்நாடும் மீண்டும் சகோதரர்களாக ஆவார்கள் என ஜகி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலை வளாகத்தில் நடைபெற்ற காவிரி கூக்குரல் நிகழ்ச்சியில் ஜகி வாசுதேவ், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய ஜகி வாசுதேவ், காவேரி நதி மீட்டெப்பதன் மூலம், கர்நாடகாவும் தமிழ்நாடும் மீண்டும் சகோதரர்களாக ஆவார்கள் எனத் தெரிவித்தார். மேலும், “பொழியும் மழை நீரில் கடந்த 100 ஆண்டில் எந்த விதமான பெரிய மாற்றமும் இல்லை. ஆனால் அந்த மழை நீர் போய் சேறுவதில் தான் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மரங்களை நடுவது மூலமாக அந்த மழை நீர் நிலத்தடி நீரை சென்றடையும். மண் அரிப்பு குறைந்து, மண் வளம் பெருகும். உலகிலேயே மிகவும் மண் வளம் நிறைந்த பகுதி தென் இந்தியா. 

ஆனால் தற்போது அதை பாலைவனமாக மாற்றி வருகிறோம். மரம் வளர்ப்பது மூலமாக, அதன் இலை சருகுகள் காய்ந்து நிலத்தில் விழும்போது மண் வளம் பெருகும், மேலும் கால்நடைகளின் கழிவுகள் மூலமாக மட்டுமே மண் வளத்தை பெருக்க முடியும். நதிநீரை இணைப்பது குறித்து  பல்வேறு பேச்சுவார்த்தை செல்கிறது. ஆனால் அவ்வாறு நதிகள் இணைக்கப்பட்டால் அனைத்து நதிகளும் அழிந்து விடும்.” எனத் தெரிவித்தார்.