தமிழ்நாடு

ஜாக்டோ-ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்

webteam

தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அடங்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பு கடந்த 9 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராடி வந்தனர். அத்துடன் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த இரண்டு கோரிக்கைகளையும் வலியுறுத்தி 9 நாட்களாக நடந்து வந்த இவர்களின் போராட்டத்தால் பல மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபடுவர்களின் ஊதியத்தை பிடிப்பதாக அரசு அறிவித்தது. அத்துடன் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு புதிய ஆட்களை எடுத்தது. 

மேலும் பணிக்கு திரும்பாத நூற்றுக்கணக்கான ஆசிரியர்களை அரசு இடைநீக்கம் செய்தது. இந்தச் சூழலில் ஜக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டார். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டத்தை கைவிடுமாறு தெரிவித்தார். இந்நிலையில் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜக்டோ-ஜியோ அமைப்பினர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டும், நீதிமன்ற வலியுறுத்தலை ஏற்றும் பணிக்குத் திரும்புவதாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி முதலமைச்சர் மற்றும் அனைத்து கட்சித் தலைவர்களின் கோரிக்கையை ஏற்றும் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக கூறியுள்ளனர். மேலும் முதலமைச்சர் தங்களை அழைத்து பேச வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.