பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விடிய விடிய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் இரவில் கிராமிய பாடலுக்கு நடனமாடி போராட்டத்தை தொடர்ந்தனர். கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமையல் செய்து இரவு முழுவதும் அங்கேயே தங்கி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கொட்டும் மழையிலும் விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பந்தல் அமைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு முழுவதும் ஆடல், பாடலும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். தமிழக அரசு தங்கள் கோரிக்கைகளை ஏற்று அரசாணை பிறப்பிக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.