தமிழகத்தின் அடுத்த டிஜிபி ஆக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தமிழக டிஜிபியாக பதவி வகித்து வரும் டி.கே.ராஜேந்திரனின் பணிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைவதால், புதிய டிஜிபி நியமனப் பணிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. பணிமூப்பு அடிப்படையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன், ஜாபர்சேட், லட்சுமி பிரசாத், அசுதோஷ் சுக்லா, மிதிலேஷ்குமார் ஜா, தமிழ்ச்செல்வன், ஆசீஷ் பங்ரா, சைலேந்திர பாபு, கரண் சின்ஹா, பிரதீப் வி.பிலிப், ரமேஷ் குடவாலா, விஜயகுமார் ஆகிய 14 பேரின் பட்டியலை தமிழக அரசு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு யுபிஎஸ்சிக்கு அனுப்பியது.
இவர்களில் ஜாங்கிட், காந்திராஜன், ஆசீஷ் பங்ரா, ரமேஷ் குடவாலா ஆகியோர் 6 மாதங்களுக்கு உள்ளாகவே ஓய்வு பெற உள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 6 மாதங்களுக்குள் ஓய்வு பெற உள்ளவரை டிஜிபியாக நியமிக்கக் கூடாது என்பதால் இவர்கள் 4 பேரும் டிஜிபியாகும் வாய்ப்பை இழந்தனர். மீதமுள்ள 10 பேரில் சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.கே.திரிபாதி, சிபிசிஐடி தலைவராக உள்ள ஜாபர் சேட் ஆகிய இருவரும் டிஜிபி நியமனப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழகத்தின் அடுத்த டிஜிபி ஆக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரிபாதி சென்னை காவல்துறை ஆணையராகவும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகவும் பணியாற்றியவர். முன்னதாக, தமிழக டிஜிபியாக ஜே.கே.திரிபாதியின் பெயரை மத்திய அரசும், ஜாபர் சேட்டின் பெயரை மாநில அரசு பரிந்துரை செய்திருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.