தமிழ்நாடு

“ஜெயலலிதா வாரிசு யார் என்பதற்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது” - ஜெ. தீபா

webteam

ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசு யார் என்ற கேள்விக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என ஜெ.தீபா தெரிவித்துள்ளார்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா’ நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்றுவதற்கு ஏற்கெனவே அரசாணை வெளியிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக இதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது. மேலும், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா வழக்கு தொடர்ந்திருந்தார். இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது.அதில்,ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால், இந்திய வாரிசுரிமைச் சட்டப்படி ஜெயலலிதாவின் சகோதரரின் மகள் தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரையும் இரண்டாம் நிலை சட்டப்பூர்வமான வாரிசுகளாக அறிவிக்கிறோம். ஜெயலலிதாவின் சொத்துக்களில் சிலவற்றை ஒதுக்கி, அவர் பெயரில் பொதுச் சேவைக்காக அறக்கட்டளை ஒன்றை தீபாவும், தீபக்கும் அமைக்க வேண்டும். அது சம்பந்தமாக எட்டு வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு ஜெ.தீபா வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசு யார் என்ற கேள்விக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நீதிமன்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைக் கூறியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்