தமிழ்நாடு

ஜெ. வீடியோ ஆர்.கே.நகர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது: சுப.வீ

ஜெ. வீடியோ ஆர்.கே.நகர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது: சுப.வீ

webteam

ஆர்.கே.நகர் தேர்தலை கருத்தில் கொண்டு ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற வீடியோவை காட்டினாலும், அது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போன்ற வீடியோ ஒன்றை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளிட்டு பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளார். 20 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த சுப.வீரபாண்டியன், ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போல் வெளியாகி இருக்கும் வீடியோ தற்போதைய அரசியல் சூழலில் பல சந்தேங்களை எற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், காலம் தாண்டியும், தேர்தல் தேதியை நெருக்கத்தில் வைத்துக் கொண்டும் இதுபோன்ற வீடியோவை வெளியிட்டதற்கான காரணம் என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் எந்த நோக்கத்தில், தினகரன் ஆதரவாளர்கள் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தாலும், அவர்களின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது என்று கூறினார். ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல் வெளியாகி இருக்கும் இந்த வீடியோ, எங்கு எடுக்கப்பட்டது? எப்போது பதிவு செய்யப்பட்டது? என்பது போன்ற வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த பின்னரே தெளிவான விளக்கம் கிடைக்கும் என்றும் கூறினார்.

மேலும், மக்களைப் பொருத்தவரையில் அவர்கள், மிகவும் தெளிவுடன் இருப்பதாகவும், முன்புபோல் புகைப்படத்தை காட்டியவுடன் உணர்ச்சி வசப்படும் நிலையில் அவர்கள் இல்லை என்றும், குறிப்பாக இந்த வீடியோ தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.