தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று முதல் தொடங்கியிருக்கிறது. அதன்படி, இன்று திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஐ.யூ.எம்.எல் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்ட 4 அடங்கிய குழு, திமுக அமைத்த தொகுதிப்பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் ஐ.யூ.எம்.எல் கட்சிக்கு வாணியம்பாடி,சிதம்பரம் கடையநல்லூர் ஆகிய 3 தொகுதிகளை திமுக ஒதுக்கியிருந்தது. ஆனால் 3 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியைத் தழுவியிருந்தது. இந்நிலையில் சூழலில் தான், இன்று ஐ.யூ.எம்.எல் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
இப்பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியே வந்த காதர் மொகிதீன் உள்ளிட்ட ஐ.யூ.எம்.எல் கட்சியினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டதாகவும், ஆனால், ஏற்கனவே போட்டியிட்ட 3 தொகுதிகளில் இருந்து 1 தொகுதியை குறைத்துக் கொண்டு 2 தொகுதிகளை மட்டுமே தருவதாக கூறியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து விட்டு வருகிறோம் எனக் கூறிவிட்டு வந்திருக்கிறோம் எனத் தெரிவித்தார். தொடர்ந்து இது, கொள்கை ரீதியான கூட்டணி தொகுதிகளுக்காக கூட்டணி மாறமாட்டோம் என்பதையும் இப்பேட்டியில் தெரிவித்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துப் பேசிக் கொண்டிருந்த போது காதர் மொகிதீன் மயக்கமடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்லீம்களின் நோன்புக்காலம் என்பதால் காதர் மொகிதீன் நோன்பிருந்து வருகிறார். அதேசமயம், வயது மூப்பு மற்றும் அதிகப்படியான வெயிலும் இருந்து வருவதன் காரணமாக காதர் மொகிதீன் மயங்கி இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இச்சூழலில், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளார்.