தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் தேனி, திண்டுக்கல், நீலகரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது 23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 24ஆம் தேதி புயலாகவும் வலுவடைந்து ஒடிஷா - பங்களாதேஷ் இடையே 26ஆம் தேதி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குழித்துறை, களியக்காவிளை, மார்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழையும், கனமழையும் பெய்தது. அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பரவலாக கனமழை பெய்தது.
வங்கக் கடலில் யாஸ் புயல் உருவாக இருப்பதையொட்டி, 22 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நாகர்கோவில் - ஹவுரா விரைவு ரயில், திருச்சி - ஹவுரா விரைவு ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் புவனேஸ்வர் விரைவு ரயில் ஆகியவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.