தமிழ்நாடு

'அது பதிலடி கார்ட்டூன்....' - சுதீஷ் விளக்கம்

JustinDurai

விஜயகாந்த் காலில் அரசியல் கட்சித் தலைவர்கள் விழுவது மாதிரியான கார்ட்டூன் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதால் நீக்கிவிட்டதாக சுதீஷ் விளக்கம் தெரிவித்துள்ளார்.

தேமுதிக துணை செயலாளரான எல்.கே. சுதீஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கார்ட்டூன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் காலில் மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் விழுந்து வணங்குவதுபோல் அந்த கார்ட்டூன் இடம்பெற்றிருந்தது. 

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கார்ட்டூனை பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே தனது ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து சுதீஷ் நீக்கினார். இந்நிலையில் நீக்கப்பட்ட கார்ட்டூன் தொடர்பாக சுதீஷ் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:  

‘’கடந்த, 2016ம் ஆண்டு நாளிதழ் ஒன்று தேர்தல் களத்தில் வெளியிட்ட கார்ட்டூனை தான் தற்போது முகநூலில் பதிவிட்டேன்.

அன்று அவர்கள் போட்ட கார்ட்டூனுக்கும், இன்று அவர்கள் வெளியிட்டுள்ள கார்ட்டூனுக்கும் (விஜயகாந்தை ஏலம் விடுவதை போல சித்தரித்து) உள்ள வேறுபாட்டை தமிழக மக்கள் அறியவே முகநூலில் பதிவிட்டேன்.

அது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதால் உடனடியாக நீக்கிவிட்டேன்’’

இவ்வாறு எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.