நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் ஐந்தாவது நாளாக, நாளையும் சோதனை தொடரும் என வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் வருமானவரித்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோத்தகிரி கர்சன் பகுதியில் உள்ள கிரீன் டீ எஸ்டேட்டிலும், நான்காவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். வருமானவரித்துறையினரின் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. அதனடிப்படையில், கர்சன் கிரீன் டீ எஸ்டேட் எப்படி வாங்கப்பட்டது, அதற்கான நிதி எங்கிருந்து பெறப்பட்டது உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விசாரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது கர்சன் எஸ்டேட் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் பெயரில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது ஏன்? என்பது உட்பட பல்வேறு கேள்விகளை முன்வைத்து நடராஜனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நீலகிரி கோடநாடு எஸ்டேட்டில் நாளையும் சோதனை நடைபெறும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.