it raid pt desk
தமிழ்நாடு

கரூரில் தொடரும் ஐடி ரெய்டு – விரியும் விசாரணை வளையம்!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை வளையம் விரிந்து கொண்டே செல்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

webteam

கரூரில் நடைபெற்று வரும் வருமானவரித் துறையினரின் சோதனை புதிய புதிய கோணங்களில் வேகமெடுத்து வருகிறது. கடந்த ஐந்து தினங்களாக ஒப்பந்ததாரர் ஒருவரின் கணக்காளரிடம் விசாரணை நடத்திய வருமானவரித் துறையினர் கணக்காளரை தங்களது வாகனத்திலேயே ஏற்றிச் சென்று, ஒப்பந்ததாரரின் மற்றொரு அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 26 ஆம் தேதி கரூருக்கு சென்ற வருமானவரித் துறையினர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்த முற்பட்டனர். அப்போது அங்கு திரண்ட திமுகவினர், வருமான வரித்துறை அதிகாரிகளை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

it raid

இதையடுத்து அப்பகுதிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள், மீண்டும் சோதனையை தொடங்கினர். இதில் முதற்கட்டமாக பால விநாயாகா குவாரி உரிமையாளர் தங்கராஜ் என்பவரின் இல்லம், கணேஷ்முருகன் குவாரி - நிதி நிறுவனம் மற்றும் தனியார் பேருந்து சேவையின் உரிமையாளர் குணசேகரன், ராமவிலாஸ் நூற்பாலை உரிமையாளர் ரமேஷ் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் கொங்கு மெஸ், சக்தி மெஸ், சுரேந்தர் மெஸ் போன்ற சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கெல்லாம் பெயரளவுக்கு மெஸ் நடத்தப்பட்டு, உள்ளே நிதி நிறுவனம் நடத்தப்பட்டது அம்பலமானது. அதேபோல் செந்தில் பாலாஜியின் நண்பரும் ஒப்பந்ததாரருமான சங்கரின் அலுவலகம், அங்கு பணிபுரியும் பெண் கணக்கர் ஷோபனா, கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், திமுக பிரமுகர் குமார், காளிபாளையம் பெரியசாமி ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

it raid

அதேபோல் செந்தில் பாலாஜியின் இளைய சகோதரர் அசோக் புதிதாக கட்டி வரும் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் நேற்று மாலை செந்தில் பாலாஜியின் நண்பரான ஒப்பந்ததாரர் சங்கர் அலுவலகத்தில் கணக்கராக பணிபுரியும் ஷோபனா என்பவரை, அவரது வீட்டிலிருந்து காரில் அழைத்துச் சென்ற அதிகாரிகள், சங்கரின் மற்றொரு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விரிவடையும் விசாரணை வளையம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.