தமிழ்நாடு

அன்புச்செழியனிடம் 2 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை

jagadeesh

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார்.

பிகில் பட வசூல் தொடர்பாக அன்புச்செழியன் வீடு உள்ளிட்ட இடங்களில் அண்மையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கடந்த 5ஆம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் நடந்த சோதனையில், 77 கோடி ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இது தொடர்பாக வருமான வரித்துறை சம்மன் அனுப்பியதை தொடர்ந்து, அன்புச்செழியனின் ஆடிட்டர் விளக்கம் அளித்திருந்தார்.

அன்புச்செழியன் நேரில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டதால், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்திற்குச் சென்று விளக்கமளித்தார். நடிகர், தயாரிப்பாளருக்கான பணப்பரிவர்த்தனை மற்றும் 300 கோடி ரூபாய் வருவாய்க்கான வரி ஏய்ப்பு புகார் ஆகியவை குறித்து இரண்டு மணி நேரம் அன்புச்செழியனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி.யில் நடைபெற்று வந்தது. இதனிடையே, வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக படப்பிடிப்பிலிருந்த விஜய்யை, வருமான வரித்துறையினர் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். மேலும் விஜய் வீட்டிலும் வருமான வரித்துறையின் சோதனை நடைபெற்றது. பின்பு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

இதனையடுத்து தான் நேரில் ஆஜராகி விளக்கமளிப்பதற்கு நடிகர் விஜய் அவகாசம் கோரியிருந்தார். இதனையடுத்து பிகில் பட விவகாரத்தில் நடிகர் விஜய்யின் ஆடிட்டர், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் ஆஜராகி அண்மையில் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.