தமிழ்நாடு

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் தொடரும் வருமான வரித்துறையினரின் சோதனை

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் தொடரும் வருமான வரித்துறையினரின் சோதனை

webteam

திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்தி வருகின்றனர்

காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில்,  தி.மு.க சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று இரவு துரைமுருகன் வீட்டுக்கு வந்த மூன்று பேர் கொண்ட குழுவினர், சோதனை நடத்த வந்துள்ளதாக தெரிவித்தனர். 

உடனடியாக துரைமுருகனின் வீட்டுக்கு வந்த அவரது வழக்கறிஞர்கள்  இது சட்டத்துக்கு புறம்பான சோதனை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சோதனைக்கு வந்தவர்களின் அடையாள அட்டைகளில் முரண்பட்ட தகவல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை சுட்டிக்காட்டியும் வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சோதனை நடத்த இரவு 10.30 மணிக்கு அதிகாரிகள் வந்த நிலையில் 4 மணி நேரம் நீடித்த வாக்குவாதத்துக்குப் பின் அதிகாலையில் வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். கூடுதலாக மேலும் 3 அதிகாரிகள் துரைமுருகன் வீட்டிற்குள் சென்றுள்ளனர்

துரைமுருகனுக்குச் சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் வாணியம்பாடியில் திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் தேவராஜ் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெறுவதால் திமுக தொண்டர்கள்  ஏராளமானோர் அவரது வீட்டு வாசலில் திரண்டு வருகின்றனர். இதனால் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சோதனை மத்திய மாநில அரசுகளின் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.