சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியிடம் வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
சென்னையில் உள்ள வருமானவரி புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் சின்னத்தம்பி ஆஜரானார். அவரிடம், குவாரிகளில் விதிமுறைகளை மீறி கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள், அதில் செய்யப்பட்டுள்ள வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடுகள் குறித்து 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 7ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னை மற்றும் புதுக்கோட்டையில் உள்ள வீடுகள், இலுப்பூரில் உள்ள அவரது தந்தை சின்னத்தம்பியின் வீடு, மற்றும் கல் குவாரிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர்.
மேலும் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் சின்னதம்பி நடத்தும் ராசி புளூ மெட்டல்ஸ் கல்குவாரி நிறுவனத்திற்கு சென்று தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வு செய்தனர். அதில் விதிமுறைகளை மீறி 3 மடங்கு அளவு அதிகமான அளவில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்து அறிக்கை தயாரித்து வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் வரிஏய்ப்பு மற்றும் முறைகேடு குறித்து விசாரணை நடத்த விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பிக்கு சென்னை நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்மன் கொடுத்தனர். அதன்படி இன்று காலை சின்னதம்பி நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரி விசாரணை நடத்தினார்.