தமிழ்நாடு

ஊழலில் சிக்கும் அதிகாரிகள் பண பலன்களை பெறுவது வேதனையளிக்கிறது - உயர் நீதிமன்றம்

kaleelrahman

தகுதியான, திறமையான பலர், குறைந்த ஊதியத்தில், ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றும் நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள், அனைத்து பண பலன்களை பெறுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

கடலூர் நகராட்சியில், நகராட்சி சுகாதார ஆய்வாளராக பணியாற்றிய ஆரோக்கியசாமி 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த ஊழல் வழக்கில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஆரோக்கியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஆரோக்கியசாமியை பணிநீக்கம் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஆரோக்கியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார். விசாரணையின்போது, தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கருத்தில் கொள்ளாமல் இந்த பணிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆரோக்கியசாமி தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி வைத்தியநாதன், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக கருத முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் அரசு ஊழியர்கள், நீதிமன்ற தண்டனையில் இருந்து தப்பி விடக்கூடாது என்பதற்காக துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்.

பல தகுதியான திறமையான நபர்கள் தற்காலிக அடிப்படையில், ஒப்பந்த பணியாளர்களாக, எந்த நேரத்தில் பணி நீக்கம் செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரக்கூடிய நிலையில், ஊழல் வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், அனைத்து பண பயன்களையும் பெறுவதாக நீதிபதி தனது உத்தரவில் வேதனை தெரிவித்துள்ளார்.