தமிழ்நாடு

ஈஷா மஹா சிவராத்திரி விழா : கோவை வரும் குடியரசுத் தலைவர்

webteam

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூன்று நாள் சுற்றுப் பயணமாக இன்று தமிழகம் வருகிறார்.

ஈஷா யோகா மையத்தில் நாளை நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோவை வருகிறார்‌. டெல்லியில் இருந்து இன்று மாலை ஆறு மணியளவில் தனி விமானம் மூலம் கோவை வரும் அவர், ரேஸ்கோர்ஸில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அவர் பயணம் செய்வதற்காக குண்டு துளைக்காத கார் ஒன்று ‌டெல்லியில் இருந்து கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணியளவில் சூலூர் விமானப்படை தளத்துக்கு அவர் செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 

இந்த நிகழ்வு முடிந்த பின்னர் பகல் 11.45 மணிக்கு கோவை அ‌ரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். மதிய உணவுக்குப் பிறகு மாலை 4.40 மணிக்கு கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். 

மாலை ஆறு மணி முதல் 7 மணி‌வரை ஈஷா யோக மையம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கோவில்களை அவர் பார்வையிடுகிறார். அதைத்தொடர்ந்து 112 அடி உயரம் உள்ள ஆதியோகி சிலை வளாகத்தில் ஒளி-ஒலி காட்சியை அவர் தொடங்கிவைக்கிறார். இதன் காரணமாக நாளை சிறுவாணி சாலை இரண்டரை மணி நேரம் போக்குவரத்திற்கு மூடப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி கோவையைச் சுற்றி ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.