தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்தது ஏன்? - பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

Veeramani

பொதுமக்களுக்கு தேர்தல் மீதே நம்பிக்கை போய் விட்ட காரணத்தால் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்தது. டிபன் பாக்ஸில் பணம் வைத்து வீட்டுக்கு வீடு கொடுத்ததுதான் திராவிட மாடல் வெற்றியா என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் துணை பொது செயலாளர் சுதீஷ் ஆகியோர் வேட்பாளர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், பண பலம், ஆட்சி பலம் எல்லாவற்றையும் தாண்டி தங்கள் கட்சி வேட்பாளர்கள் வென்றுள்ளதாக தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 'திராவிட மாடல்' வெற்றி அடைந்திருப்பதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால் கோயம்புத்தூரில் அவர்கள் டிபன் பாக்ஸில் பணம் வைத்து வீட்டுக்கு வீடு கொடுத்தது தமக்கு தெரியும் எனவும் இதுதான் திராவிட மாடல் வெற்றியா என பிரேமலதா கேள்வி எழுப்பினார். இது போன்று வாக்குக்கு காசு கொடுத்து வெற்றி பெறுவது எங்களை பொறுத்தவரை உண்மையான வெற்றிக்கு சமம் அல்ல எனவும் பிரேமலதா விமர்சித்தார்.

தேர்தலின்போது கொரோனா நோயாளிகள் வாக்களிக்க நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் திமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாக தமக்கு தகவல் கிடைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்த தேர்தலைப் பொறுத்தவரை எல்லாமே ஏற்கனவே திட்டமிடப்பட்டு நடக்கிறது என உணர்வதாகவும், உண்மையாக ஜனநாயக ரீதியில் இனி தேர்தல் நடைபெறுமா என்பது சந்தேகமே என அவர் வருத்தம் தெரிவித்தார். இனியாவது நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, மத்தியில் உள்ள கட்சி என அனைவரும் வாக்குக்கு காசு கொடுத்து தேர்தலில் வெற்றிபெற்று இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடுக்கப்படுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு, வழக்கு நடத்தி எதையும் மாற்ற முடியாது எனவும் வழக்குகளை ஆட்சியாளர்கள் எளிதாக எதிர்கொண்டு விடுவார்கள், இந்த தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்பது மட்டும் உண்மை எனவும் அவர் கூறினார். சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு மக்களுக்கு தேர்தலின் மீதான நம்பிக்கை குறைந்ததே காரணம் என அவர் தெரிவித்தார்.