தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கி விட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பிறகு சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற உறுப்பினரான நான் அனுமதி பெற்று சென்னையில் வாக்களித்தேன். இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டுமானால் சட்டம் தெரிந்த வேட்பாளரான யஷ்வந்த் சின்கா வெற்றி பெற வேண்டும். பாஜக அரசியல் சாசனத்தை சிதைக்கிறது.
பள்ளிக் கூடத்தில் மாணவிகளுக்கு எதிரான விசயங்கள் காலம் காலமாக நடந்து வருவதுதான், முன்பு வெளியில் சொல்வதற்கு கூச்சப்பட்டனர், இப்போது வெளியே வந்து விடுகிறது. அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க ஆசிரியர்கள் அல்லாத உளவியல் ஆலோசகர் ஒருவரை பள்ளிகளில் நியமிக்க வேண்டும், தேர்வு அழுந்தம் மட்டுமின்றி, சமூக ரீதியாக பல அழுத்தங்களும் மாணவர்கள் மீது இன்று உருவாக்கப்படுகின்றன. கூட்டு குடும்ப முறையில் இருப்பதால் நமது சமூகத்தில் மன அழுத்தங்கள் பலருக்கும் இருக்கிறது.
அமலாக்கத்துறை விசாரணையில் நான்தான் நிபுணர். 20 முறை எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.. எனவேதான் அடுத்த முறை அமலாக்கத்துறை விசாரணை நடந்தால் அதை நேரலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளேன். வெளியில் இருந்து பார்க்க அது பெரிதாக தெரியும். ஆனால், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களால் மன உளைச்சல் கொடுத்து நேரத்தை வீணடிக்கச் செய்வதற்குதான் அமலாக்கத்துறை விசாரணை நடக்கிறது.
ராகுலிடம் 5 நாள் விசாரித்ததை போல, மன உளைச்சல் தருவதற்காக சோனியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது. அமலாக்கத்துறை நாஜிக்கள் போல செயல்படுகிறது. நாடாளுமன்றத்தில் சிங்கம் போன்ற தேசிய சின்னங்கள் கூட மாற்றப்படுகிறது. பாஜக-வினர் ஒற்றை கட்சி அரசாங்கத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். இதை தடுக்க தமிழகம் போல அனைத்து மாநிலங்களும் தெளிவுபெற வேண்டும்.
தர்மபுரி செந்தில்குமார் செய்தது தேவையில்லாத சர்ச்சை. ஒருவர் புதிதாக வண்டி வாங்கினால் கூட எலுமிச்சம் பழத்தை வைத்து விட்டுதான் வண்டியை எடுப்பார்கள்.
தமிழகத்தில் எந்த கட்சியாக இருந்ததாலும் வேட்புமனு தாக்கல் செய்தாலும் பதவி ஏற்றாலும் கரி நாள் போன்ற நாளாக இல்லாமல் நல்ல நாள் நல்ல நேரம் பார்த்தே செய்கின்றனர். ஏனென்றால் அதுதான் நமது பழக்கம்.
எனக்கு பொருளாதாரத்தில் ஆடம் ஸ்மித் மாடல் , subbliess model போன்றவை பற்றி தெரியும். ஆனால் திராவிட மாடல் என்பது பொருளாதார மாடலா அல்லது சமூக மாடலா என தெரியவில்லை. திராவிட மாடல் சமூக மாடல் என்பதை ஏற்கிறேன். அது பொருளாதார மாடலா என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும்.
காங்கிரஸ் வெற்றி பெறாவிட்டாலும் கட்சியின் சித்தாந்தம் கெடவில்லை. இந்தியாவில் 20 சதவீத வாக்கு காங். கட்சிக்கு இருக்கிறது. காங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை வெளிப்படுத்தினால் வளர்ச்சி அடையும். தன்னுடைய குரலை வேகப்படுத்தி பொதுமக்களை நேரில் சந்திக்க வேண்டும். சமூக வலைதளங்களில் பதிடுவது கட்சி வளர்ச்சிக்கு போதுமானதல்ல என்று கூறினார்