டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக ரஜினி தெரிவித்திருந்த நிலையில், எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் கட்சி தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி எனவும், தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியை கொடுப்பேன் எனவும் சூளுரைத்தார் ரஜினிகாந்த். இதைத்தொடர்ந்து சமீபத்தில் தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடுவது குறித்த உறுதியான முடிவை விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்திருந்தார். அதையடுத்து, வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அத்துடன், “ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு” என்றும் ரஜினி தெரிவித்திருந்தார். இதையடுத்து கட்சி ஆரம்பிப்பதற்கான ஆயத்தப்பணிகள் அவ்வபோது நடைபெற்று வருகிறது. மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பும், பூத் கமிட்டி பணியும் நடைபெற்று வருகின்றன. மேலும், கட்சி தொடங்குவதற்கான தேதி குறித்த ஆலோசனையில் ரஜினிகாந்த் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், எம்.ஜி.ஆர் பிறந்த நாளான ஜனவரி 17ஆம் தேதி ரஜினி கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. மூன்று தேதிகள் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ள நிலையில், எம்.ஜி.ஆர் பிறந்த நாள் தேதியில் கட்சி தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.